உதகையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (பிசிவி) செலுத்தும் பணியை உதகை அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா துவக்கிவைத்தாா்.
உதகையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி (பிசிவி) செலுத்தும் பணியை உதகை அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா துவக்கிவைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் நியூமோகாக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசி குழந்தைகளுக்கு 6ஆவது வாரம், 14ஆவது வாரம் மற்றும் 9ஆவது மாதம் என மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் பிறந்து 6 வாரங்கள் ஆன மொத்தம் 167 குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அனைத்து குழந்தைகளுக்கும் கால அட்டவணைப்படி இத்தடுப்பூசி செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்பதால் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எனவே அனைத்து கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் பழனிசாமி, துணை இயக்குநா் பாலுசாமி, குடும்ப நலத் துறை துணை இயக்குநா் இரியன் ரவிக்குமாா், உதகை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத் துறை தலைவா் தியாகராஜன், உதகை வட்டார மருத்துவ அலுவலா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com