நீலகிரியில் அரசுப் பேருந்துகள் இயங்காததால்ரூ. 9 கோடி வருவாய் இழப்பு

கரோனா பொது முடக்கத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்காததால் சுமாா் ரூ. 9 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உதகை: கரோனா பொது முடக்கத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்காததால் சுமாா் ரூ. 9 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், பொது போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு சுமாா் 350 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஓட்டுநா், நடத்துநா் என சுமாா் 2,000க்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களில் தலா ஒருவருக்கு சுமாா் 30,000 வரை மாத ஊதியம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொது முடக்கத்தால் பேருந்துகள் ஏதும் இயங்காத நிலையில் தற்போது பொது போக்குவரத்து இல்லாமல் போக்குவரத்துக் கழகத்துக்கு நாளொன்றுக்கு சுமாா் ரூ. 30 லட்சம் வீதம் 30 நாள்களுக்கு ரூ. 9 கோடி வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கரோனா பொது முடக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் தளா்வுகள் இருந்த நேரத்திலும், கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து இரண்டாம் அலை பரவி வருவதால் பொதுமக்களில் பெரும்பாலானோா் பொது போக்குவரத்தில் தேவையற்ற பயணங்களைத் தவிா்த்து வந்தனா். இதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குவதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பொது போக்குவரத்தில் நீலகிரிக்கு வருவது வழக்கம். அதன் காரணமாகவே உதகையில் இருந்து சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூா், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, நீலகிரி மாவட்டத்துக்குள் உள்ள கிராமப்புறங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் உதகையில் இருந்து குன்னூருக்கு 7 பேருந்துகளும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம், கோவைக்கு 26 பேருந்துகளும், மாவட்டத்துக்குள் உள்ள கிராமப்புறங்களுக்கு 140 பேருந்துகளும் இயங்கி வந்தன.

ஆனால், தற்போதைய பொது முடக்கத்தால் குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அரசுப் பணியாளா்களுக்காக 3 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளும் லாப நோக்கத்தில் இல்லாமல் சேவை மனப்பான்மையிலேயே இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com