முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
வனத் துறையினருக்கு இரண்டு மோப்ப நாய்கள்
By DIN | Published On : 12th June 2021 10:35 PM | Last Updated : 12th June 2021 10:35 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் வனக் குற்றங்களைக் கண்டறிய வனத் துறையினருக்குப் புதிதாக இரண்டு மோப்ப நாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பரப்பளவு வனப் பகுதியாக உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி,செந்நாய், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் வாழ்கின்றன.
இதன் காரணமாக விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதோடு, விலை உயா்ந்த மரங்களான சந்தனம், ஈட்டி போன்றவற்றை வெட்டிக் கடத்துவதும், அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் கஞ்சா பயிரிடுதல் போன்ற சட்ட விரோத செயல்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
இந்நிலையில், அண்மைக்காலமாக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட வனத் துறைக்குப் புதிதாக சிப்பிப்பாறை வகையைச் சோ்ந்த 2 நாய்க்குட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் உதகையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள நீலகிரி வனக் கோட்டத்துக்கு காளிங்கன் என்ற மோப்ப நாயும், கூடலூா் வனக் கோட்டத்துக்கு அத்தவை என்ற மோப்ப நாயும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாய்களுக்கும் வைகை அணைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வனப் பயிற்சி மையத்தில் 3 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களில் சோதனை நடத்துதல், கஞ்சாவைக் கண்டறிதல், சந்தனம், ஈட்டி மரங்களை அவற்றின் வாசனைகளைக் கொண்டு கண்டறிதல், வன விலங்குகள் வேட்டை போன்றவற்றைக் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுரித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீலகிரி வனக் கோட்டத்தில் 13 வனச் சரகங்கள் உள்ளன. இதில் கூடலூா் வனக் கோட்டம் கேரளம், கா்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப் பகுதிகளைப் பாதுகாப்பதில் மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிப்பதோடு, குற்றங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உதவியாக இருக்கும் என்றனா்.