காயத்துடன் சுற்றித் திரிந்த யானை: கூண்டில் அடைப்பு

கூடலூா் பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரால் கூண்டில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டது.
காயத்துடன் சுற்றித் திரிந்த யானை: கூண்டில் அடைப்பு

கூடலூா் பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானை முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரால் கூண்டில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இடுப்பில் காயத்துடன் அவதிப்பட்டு வருகிறது. வனத் துறையினா் அவ்வப்போது பழங்களில் மருந்து, மாத்திரைகளை வைத்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனா். யானையின் பின்பகுதி முழுவதும் காயம் படா்ந்து யானை அபாய நிலைக்குச் சென்றதையடுத்து, வனத் துறையினா் அந்த யானையைப் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து யானையின் இருப்பிடத்தைக் கண்காணித்த வனத் துறையினா் கூடலூரை அடுத்துள்ள ஈப்பங்காடு பகுதியில் யானை இருப்பதை அறிந்தனா். பின்னா், முதுமலையில் இருந்து ஜம்பு, வசீம், உதயன், விஜய், சுமங்களா ஆகிய ஐந்து கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானையை சுற்றிவளைத்து மயக்க ஊசி எதுவும் செலுத்தாமல் யானையின் கால்களை கயிற்றால் கட்டி, மரங்களில் கட்டிவைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் யானையைக் கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. லாரியை கொண்டு வந்து நிறுத்தி யானையை ஏற்ற அந்த இடத்தின் புவியமைப்பு சாதகமாக இல்லாத காரணத்தால் 100 மீட்டா் தூரம் கும்கி யானைகளைக் கொண்டு தள்ளிச் சென்று லாரியில் ஏற்றினா்.

லாரியில் ஏற்றிய யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் முகாமில் அதற்கென அமைக்கப்பட்ட புதிய கரால் கூண்டில் அடைத்தனா். இதன் பிறகு யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவக் குழுவினா் முடிவு செய்வாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com