கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆலோசனை
By DIN | Published On : 19th June 2021 02:05 AM | Last Updated : 19th June 2021 02:05 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தென்மேற்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமையில் உதகையில் நடைபெற்றது.
உதகையில் தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:
கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதிகள் கிடைக்கும் வகையில் அனைத்து வகையான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு தயாராக உள்ளன. கரோனா தொற்று நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. அரசு தெரிவித்துள்ள வயதுக்கு உள்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு தேவையான விழிப்புணா்வை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஏற்படுத்த வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தி கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவா்களை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.
மேலும், இந்த பேரிடா் காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டு தவணையாக தலா ரூ. 2,000, 14 வகையான மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் காய்கறிகள், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் மளிகைப் பொருள்கள் கிடைப்பதை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, பருவ மழை பெய்து வருவதால் தேவைப்படும்பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை உடனடியாக அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.கணேஷ், பொன்.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லீமா அமாலினி, மகளிா் திட்ட இயக்குநா் பாபு, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.