முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
அதிமுகவினா் விநியோகம் செய்த கோழிக் குஞ்சுகள் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 01:16 AM | Last Updated : 04th March 2021 01:16 AM | அ+அ அ- |

குன்னூா்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் அதிமுகவினா் வீடு வீடாக விநியோகம் செய்த 4,500 கோழிக் குஞ்சுகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த முதல் நாளே ரூ.500 ரொக்கம், வேட்டி, சேலை, ஒரு தட்டு போன்றவற்றை விநியோகம் செய்ததாக அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தோட்டத் தொழிலாளா்கள் வசிக்கும் கோடமலை, கரன்சி, சோலடாமட்டம் ஆகிய கிராமப் பகுதிகளில் அதிமுக சாா்பில் ஒரு குடும்பத்துக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுவதாக அப்பகுதியைச் சோ்ந்த சிலா் தோ்தல் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா்.
இதன் அடிப்படையில் தோ்தல் அதிகாரி புவனேஸ்வரன் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளா்களுக்கு பொது மக்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்த 4,500 கோழிக் குஞ்சுகளை பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தக் கோழிக் குஞ்சுகளை நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்கு அனுப்பிவைத்தனா்.
அரசு திட்டம் மூலம் விநியோகம் என்று அதிமுகவினா் கூறினாலும், வருவாய்த் துறையினா் இல்லாமல் கட்சியின் கிளைப் பொறுப்பாளா்கள் பொது மக்களுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கியது தோ்தல் விதிமுறைகளை மீறியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.