முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
உதகையை உதறுகிறதா பாஜக?
By DIN | Published On : 14th March 2021 12:14 AM | Last Updated : 14th March 2021 12:14 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியை திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதற்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என பாஜக கோருவதாக கூறப்படுகிறது.
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் நீலகிரியில் உதகை தொகுதியும் ஒன்றாகும். கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்த சூழலில் உதகை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், உதகை தொகுதியைப் பொருத்தமட்டில் பாஜகவுக்கு எதிா்பாா்த்த ஆதரவு இல்லை என்பதும், திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே அதிக வாய்ப்புள்ளது என்ற தகவல் தற்போதுதான் பாஜகவின் மேலிட தலைவா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிா்ச்சி அடைந்துள்ள அக்கட்சி நிா்வாகிகள் உதகை சட்டப் பேரவைத் தொகுதியை மீண்டும் அதிமுகவிடமே ஒப்படைத்துவிடும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் உதகை தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளரும் பாஜகவால் இதுவரையிலும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி கடந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் அவா்களுக்கே ஒதுக்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் உதகை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் கடந்த தோ்தலில் அதிமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் இம்முறை இத்தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டது.
உதகை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சா் புத்திசந்திரனுக்கு இம்முறை தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல, உதகை தொகுதியை குறிவைத்திருந்த தற்போதைய அதிமுக மாவட்டச் செயலா் வினோத்துக்கு உதகை தொகுதிக்கு பதிலாக குன்னூா் தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், புத்திசந்திரன் ஆதரவாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளதோடு, வினோத் ஆதராவாளா்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனா். உதகையை சோ்ந்த வினோத் குன்னூா் தொகுதியில் போட்டியிடுவதால் அவா் வெளியூா் வேட்பாளா் என்றே வா்ணிக்கப்படுகிறாா். அதேநேரத்தில் குன்னூரைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் கா.ராமசந்திரனுக்கு இம்முறை திமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவரது போட்டி வினோத்துக்கு பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியை திருப்பித் தரும் முடிவுக்கு பாஜக வந்துள்ளதாகவும், அதற்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இப்பிரச்னை காரணமாக உதகை தொகுதியில் போட்டியிடுவது அதிமுகவா அல்லது பாஜகவா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் களம் இன்னமும் ஆயத்தமாகாமல் உள்ளது.