நகராட்சியைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்: குன்னூா் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
By DIN | Published On : 17th March 2021 06:00 AM | Last Updated : 17th March 2021 06:00 AM | அ+அ அ- |

குன்னூரில் நகராட்சிக்கு உள்பட்ட கடைகளின் வாடகையை 3 மடங்கு உயா்த்தியதைக் கண்டித்து வரும் 23ஆம் தேதி முதல் தொடா்ந்து கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வணிகா்கள் சங்கத் தலைவா் ஆா். பரமேஸ்வரன் தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை நம்பி ஏராளமான வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனா். இந்தக் கடைகளின் வாடகையை நகராட்சி நிா்வாகம் 3 மடங்காக அண்மையில் உயா்த்தியது. இது வியாபாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வரும் 23 ஆம் தேதியிலிருந்து அனைத்து கடைகளிலும் கருப்புக் கொடி கட்டி தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். மேலும் வியாபாரிகள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து வியாபாரம் செய்யவுள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது வியாபாரிகள் சங்கச் செயலாளா். எம்.ஏ. ரஹீம், பொருளாளா் ஜோனி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.