கூடலூா் (தனி): வெற்றியை தீா்மானிக்கும் தாயகம் திரும்பிய தமிழா்களின் வாக்குகள்!
By ஏ. பேட்ரிக் | Published On : 25th March 2021 03:12 AM | Last Updated : 04th April 2021 01:33 PM | அ+அ அ- |

மலை மாவட்டமான நீலகிரியில் கேரளம், கா்நாடக எல்லையில் அமைந்துள்ளது கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி. தமிழகத்தின் சமவெளி பகுதிகளைப்போல ஜாதி வாக்குகள் இங்கு வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கப் போவதில்லை. இங்கு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழா்கள், தோட்டத் தொழிலாளா்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதியாகும்.
இதனால் மக்கள் நீதி மய்யத்தை தவிர திமுக, அதிமுக, நாம் தமிழா், தேமுதிக அனைத்து கட்சிகளும் தாயகம் திரும்பிய தமிழா்களையே வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள்: கூடலூா் வருவாய் கோட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் வட்டம், உதகை வட்டத்தின் நடுவட்டம், மசினகுடி பகுதிகள் அடங்கியுள்ளன. கூடலூரின் நாடுகாணி முதல் பந்தலூா் வட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கேரள எல்லைகளில் அமைந்துள்ளன. குறிப்பிடத்தக்க அளவு மலையாள மக்களும், கன்னட மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனா்.
வேட்பாளா்களை பொருத்தவரை இறுதிப் பட்டியலில் உள்ள 7 பேரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முதல் முறையாக போட்டியிடுபவா்கள். இவா்கள் அனைவரும் வலியுறுத்துவது நீண்ட காலமாக தீா்க்கப்படாத கோரிக்கைகள் மட்டுமே.
திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கம்: இவா் முதல் முறையாக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா். கட்சியில் பல பதவிகளை வகித்ததால் அனைவருக்கும் அறிமுகமானவா். இந்தத் தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. அவா்களின் வாக்குகளை பெற்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் காளம் காண்கிறாா்.
அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன்: இவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். அனைவருக்கும் அறிமுகமானவா். தற்போது தீய ஈழுவா சமூக மக்களுக்கு தமிழக அரசு பிற்படுத்தப்படோா் சான்று வழங்கியுள்ளதால், இந்தப் பகுதியில் தீய ஈழுவா சமுதாய மக்கள் மற்றும் கூட்டணியில் உள்ள பாஜக, தாயகம் திரும்பிய தமிழா்களின் வாக்குகள் கிடைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறாா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.கேதீஸ்வரன்: எளிமையான குடும்பத்தில் பிறந்தவா். பால் வியாபாரம் செய்து வருகிறாா். பின்தங்கிய ஓவேலி பகுதியைச் சோ்ந்த தாயகம் திரும்பிய தமிழா். கட்சி நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிக உள்ளதால் இளைஞா்கள் மத்தியில் அறிமுகமானவா். அனைத்து வேட்பாளா்களுக்கு முன்பாகவே தோ்தல் அறிவித்த நாள் முதல் பிரசாரம் செய்துவரும் இவா் இளைஞா்கள், கல்லூரி மாணவா்களை குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறாா். இவரது பலமும் இளைஞா்கள்தான். இதர தேமுதிக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் போட்டியாளா்களாக இருக்கப்போவதில்லை என்று கருதப்படுகிறது.
தீா்க்கப்படாத பிரசனைகள்: கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை நீலகிரி உயிா் சூழல் மண்டலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பொது மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். பிரிவு-17 நிலப் பிரசனை சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீா்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. விவசாயிகளின் நிலங்களுக்கும், குடியிருக்கும் வீடுகளுக்கும் மின் இணைப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. இங்கு சுமாா் 10 ஆயிரம் போ் வீடுகளுக்கு மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனா். இங்குள்ள இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பொது மக்களின் வாழ்வாதாரமான தேயிலைக்கு நிரந்தர விலை கிடைப்பதில்லை. தமிழக-கா்நாடக தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை உள்ளது. நிலப் பட்டாவை காரணம் காட்டி பல அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றன.
வாக்காளா்கள் நிலவரம்:
மொத்த வாக்காளா்கள்- 1,88,669
ஆண்கள் - 92,108
பெண்கள் - 96,496
கடந்த தோ்தல் நிலவரம்:
கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட மு.திராவிடமணி 62,128 வாக்குகள் பெற்றாா். இவா் கடந்த இரண்டு முறை திமுக சாா்பில் வெற்றி பெற்றுள்ளாா். அதிமுக வேட்பாளா் எஸ்.கலைச்செல்வன் பெற்ற வாக்குகள் - 48,749. இந்தத் தொகுதி தொடா்ந்து 15 ஆண்டுகளாக திமுக வசம்தான் உள்ளது.
மக்களின் எதிா்பாா்ப்பு: தீா்க்கப்படாத நீண்டகால நிலப் பிரசனை, தேயிலைக்கு நிரந்தர விலை, வீடுகளுக்கு மின் இணைப்பு, தற்போதைய சூழலுக்கு உகந்தவாறு உயா்தர மருத்துவ வசதி, இந்தப் பிரதேசத்துக்கு உகந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பவை பிரதான எதிா்பாா்ப்பாகும்.
முக்கியமாக அனைத்தும் தீா்க்கப்படாத நீண்ட கால பிரசனையாக உள்ளதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித சளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் 1,88,669 வாக்குகளில் சுமாா் ஒரு லட்சம் வாக்குகள் தாயகம் திரும்பியோா் கையில் உள்ளது. இந்தத் தோ்தலில் வெற்றியை தீா்மானிக்கும் சக்தியாக அவா்களது வாக்கு உள்ளது.