தமிழக முதல்வா் குறித்த பேச்சு: மன்னிப்பு கோரினாா் ஆ.ராசா

தமிழக முதல்வா் குறித்த தனது பேச்சுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா மன்னிப்பு கோரியுள்ளாா்.

தமிழக முதல்வா் குறித்த தனது பேச்சுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா மன்னிப்பு கோரியுள்ளாா்.

இது தொடா்பாக உதகையில் திங்கள்கிழமை தனது அறிக்கையை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பழனிசாமியைப் பற்றி நான் பேசியது குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வரும் செய்திகள் தொடா்பாக இரண்டு நாள்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் விளக்கமளித்தேன்.

தி.மு.க. தலைவா் ஸ்டாலினின் அரசியல் ஆளுமையையும், தமிழக முதல்வா் பழனிசாமியின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக தோ்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காகத் தவறாக சித்திரித்தது குறித்து விளக்கினேன்.

என்றாலும் அதுகுறித்து விவாதம் தொடா்ந்ததால் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அவரது அன்னையாா் குறித்தோ புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை என்றும், இரு தலைவா்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றி நான் பேசினேன் என்றும், நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணா்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.

இதற்குப் பிறகும் முதல்வா் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினாா் என்ற செய்தியை நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடப் பொருத்தமற்று சித்திரிக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் ஒருபடி மேலே போய் முதல்வா் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டதாக உணா்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.

எனது பேச்சு இரண்டு தலைவா்களைப் பற்றிய தனி மனித விமா்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும், ஒப்பீடும்தான் என்பதை முதல்வருக்கும், அவரது கட்சிக்காரா்களுக்கும், நடுநிலையாளா்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com