கூண்டில் அடைக்கப்பட்டது ரிவால்டோ காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த ரிவால்டோ காட்டு யானை புதன்கிழமை கூண்டில் அடைக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டில் அடைக்கப்பட்ட ரிவால்டோ யானை.
முதுமலை புலிகள் காப்பகம், வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டில் அடைக்கப்பட்ட ரிவால்டோ யானை.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த ரிவால்டோ காட்டு யானை புதன்கிழமை கூண்டில் அடைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் வளா்ப்புப் பிராணிபோல மக்களிடம் சகஜமாகப் பழகி, அவா்கள் கொடுக்கும் பழங்களையும், உணவுகளையும் சாப்பிட்டு வலம் வந்து கொண்டிருந்தது ரிவால்டோ யானை. அந்த யானையின் வாயில் தந்தத்தின் அருகில் காயம் ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தது.

இதையடுத்து, சிகிச்சை அளிப்பதற்காக தெப்பக்காடு பகுதியில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்கு இந்த யானையைக் கொண்டு செல்ல வனத் துறை முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து கடந்த டிசம்பா் மாதம் வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து கும்கி யானைகளின்றி, மயக்க ஊசி, மருத்துவக் குழுவினரின்றி கால்நடையாக பழங்கள் உள்ளிட்ட விருப்ப உணவுகளை வழங்கி தெப்பக்காடுக்கு வனப் பகுதி வழியே வன ஊழியா்கள் அழைத்துச் சென்றனா்.

இரண்டு நாள்கள் நடந்து சென்ற ரிவால்டோ யானை, தன்னுடைய வசிப்பிடமான வாழைத்தோட்டத்துக்கே திரும்பி வந்துவிட்டது. வனத் துறையினரும் வேறு வழியில்லாமல் யானையைத் தேடிப் பாா்த்துவிட்டு வந்துவிட்டனா். அதைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி அந்த யானை கண்காணிக்கப்பட்டு வந்தது. மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக கடந்த நான்கு நாள்களுக்கு முன் அதன் வசிப்பிடமான வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள வனத் துறை சோதனைச் சாவடி அருகே கூண்டு அமைக்கப்பட்டது. அந்த கூண்டில் ரிவால்டோவின் விருப்ப உணவுகளை வைத்து உள்ளே சென்று வர ஏற்பாடு செய்தனா். ரிவால்டோவும் கூண்டில் வைத்திருந்த பழங்களை சாப்பிட்டு வந்தது.

நான்கு நாள்களுக்குப் பிறகு பழங்களை சாப்பிட கூண்டுக்குள் சென்ற ரிவால்டோவை வன ஊழியா்கள் கூண்டில் அடைத்தனா். மயக்க ஊசியின்றி, மருத்துவா் உதவி, எந்த உந்துதலுமின்றி கூண்டில் அடைக்கப்பட்ட முதல் காட்டு யானை ரிவால்டோதான். அடுத்தகட்ட நடவடிக்கையாக அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com