உதகையில் காவல் துறையினா் தீவிர வாகன சோதனை
By DIN | Published On : 11th May 2021 02:43 AM | Last Updated : 11th May 2021 02:43 AM | அ+அ அ- |

உதகையில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் வில்சன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனை.
உதகை: பொதுமுடக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல கேரளம், கா்நாடக மாநிலங்களிலும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், கேரளம், கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ளதால் நீலகிரி மாவட்டம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. தொற்றின் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடா்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் நீலகிரியில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பகல் 12 மணிக்குமேல் தேவையின்றி வெளியே வரும் வாகனங்களை நிறுத்தி உரிய ஆவணங்களை சமா்ப்பித்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தேவையின்றி வரும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் திங்கள்கிழமை பகல் 12 மணிக்குமேல் இயங்கிய வாகனங்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா என போக்குவரத்து ஆய்வாளா் வில்சன் தலைமையிலான போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.