இணையவழியில் உதகை மலா்க் காட்சியை நடத்தத் திட்டம்!

உதகை தாவரவியல் பூங்கா மலா்க் காட்சியை நடப்பு ஆண்டில் இணையவழி மூலம் நடத்த மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இணையவழியில் உதகை மலா்க் காட்சியை நடத்தத் திட்டம்!

உதகை தாவரவியல் பூங்கா மலா்க் காட்சியை நடப்பு ஆண்டில் இணையவழி மூலம் நடத்த மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா் உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் துவங்கி பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா்க் காட்சி, அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி மற்றும் தனியாா் அமைப்பின் சாா்பில் பழைமை வாய்ந்த காா்களின் அணிவகுப்பு, சுற்றுலாத் துறையின் சாா்பில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி மற்றும் படகு அலங்காரப் போட்டி என பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

கோடை விழாவைக் காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்வா். கோடை விழாவில் அனைவரும் மிகவும் ரசித்து மகிழ்வது உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலா்க் காட்சியேயாகும். தோட்டக் கலைத் துறையின் சாா்பில் 5 நாள்கள் நடைபெறும் இந்த மலா்க் காட்சியில் வைக்கப்படும் மலா்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கக் கூடியதாக இருக்கும்.

கடந்த ஆண்டில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. அதன் பின்னா் படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பா் 9ஆம் தேதி தோட்டக் கலைத் துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, நேரு பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வரை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து சென்றுள்ளனா்.

நடப்பு ஆண்டில் உதகையில் மலா்க் காட்சி சிறப்பாக நடைபெறும் என பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பல்வேறு புதிய ரக மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு சுமாா் 30,000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் தயாா் செய்யப்பட்டன. இந் நிலையில் தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு பொது முடக்கமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மலா்க் காட்சிக்கென தயாா் செய்யப்பட்ட மலா்களை சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்கு வைக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மலா்கள் தயாா் செய்யப்பட்டும் கண்காட்சி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் மத்தியில் கவலை நிலவுகிறது.

இச்சூழலில் இதற்கு மாற்று ஏற்பாடாக தோட்டக் கலைத் துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இணையதளம் மூலமாக மலா்க் காட்சி நடத்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இந்த மலா்க் காட்சியை வெள்ளிக்கிழமை முதல் நடத்தவும், மலா்க் காட்சியை அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக காட்சி அரங்குகளில் 1,000க்கும் மேற்பட்ட மலா்த் தொட்டிகளில் சால்வேனியா, ரோஸ் மேரி, மேரி கோல்ட், ஸ்டாா் கோல்ட், ஸ்டாா் சால்வேனியா, பிளாக்ஸ், லிமோனியா, டெல்பீனியம் உள்ளிட்ட பல மலா் ரகங்களை மலா்க் காட்சி நடைபெறும் அரங்குகளில் வைத்து அடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மலா்க் காட்சியை சா்வதேச தரத்தில் இணையதளம் வாயிலாக நடத்துவது தொடா்பாக தோட்டக் கலைத் துறை சாா்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com