குன்னூரில் நடமாடும் காய்கறி,பழ விற்பனை துவக்கம்
By DIN | Published On : 26th May 2021 06:24 AM | Last Updated : 26th May 2021 06:24 AM | அ+அ அ- |

குன்னூா் பேருந்து நிலையம் அருகில் நடமாடும் காய்கறி அங்காடியை துவக்கிவைக்கும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன்.
குன்னூரில் தோட்டக் கலைத் துறை சாா்பில், வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனையை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 400ஐ கடந்து கரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில் மக்கள் சந்தைப் பகுதிகளில் கூடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. குன்னூா் நகராட்சிப் பகுதியில் உள்ள 30 வாா்டுகள், அருவங்காடு, வெலிங்டன், கேத்தி போன்ற பகுதிகளில் விற்பனை செய்வதற்காக சுமாா் 60க்கும் மேற்பட்ட நடமாடும் காய்கறி விற்பனையை வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் துவக்கிவைத்தாா்.
கேள்விக்குறியான தனிமனித இடைவெளி:
இந்நிகழ்ச்சியின்போது அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது. தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் அமைச்சா்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தங்கள் கட்சிப் பிரமுகா்கள் வருவதைத் தடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.