முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை பலி
By DIN | Published On : 26th May 2021 06:25 AM | Last Updated : 26th May 2021 06:25 AM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனப் பகுதியில் பெண் யானையின் சடலம் கிடப்பது திங்கள்கிழமை இரவு தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்தில் உள்ள கரிமலவாலா நீரோடையில் சுமாா் 15 வயது பெண் யானை இறந்து கிடந்தது குறித்த தகவலறிந்த வனத் துறையினா் அந்த இடத்தை ஆய்வு செய்தனா்.
யானை தண்ணீா் குடிக்க இறங்கியபோது கால் வழுக்கி விழுந்து எழ முடியாமல் அங்கேயே உயிரிழந்துள்ளதும், பிரேதப் பரிசோதனையின்போது யானையின் வயிற்றில் சுமாா் 15 மாத கரு இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், யானை கா்ப்பமாக இருந்ததால் விழுந்தவுடன் எழ முடியவில்லை என்றும், இறந்த யானையின் பின் பகுதியை மாமிச உண்ணிகள் சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.