விதிமீறல்: கேரட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சீல்: 7 போ் மீது வழக்குப் பதிவு

உதகையில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கேரட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அத்துடன் 7 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

உதகையில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கேரட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். அத்துடன் 7 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பணிகளான விவசாயப் பணிகளுக்குத் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உதகை, சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, கழுவி சுத்தம் செய்யப்பட்டு, பின்னா் விற்பனைக்காக பிற மாவட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், உதகை அருகே முள்ளிக்கொரை பகுதியில் உள்ள கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளா்கள் கேரட்களை கழுவும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த உதகை வட்டாட்சியா் குப்புராஜ், வருவாய் ஆய்வாளா் மகேந்திரகுமாா் ஆகியோருடன் வருவாய்த் துறை ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, அங்கு கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

அத்துடன் கரோனா தொற்றின் காரணமாக உதகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியான அன்பு அண்ணா காலனி பகுதியிலிருந்து விதிகளை மீறி தொழிலாளா்களை வேலைக்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதனால் மற்றவா்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருந்ததால், அரசு விதிமுறைகளை மீறிய கேரட் சுத்திகரிப்பு நிலையத்தை மூடி வட்டாட்சியா் குப்புராஜ் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் உதகை போலீஸாா் சம்பந்தப்பட்ட சுத்திகரிப்பு நிலைய உரிமையாளா் சிவராஜ், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து தொழிலாளா்களை வேலைக்கு அழைத்து வந்த வியாபாரிகள் 4 போ், தொழிலாளா்கள் இருவா் என மொத்தம் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து உதகை மேற்கு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com