கரோனா பொதுமுடக்கம்: மாசில்லா மாவட்டமாக மாறிவரும் நீலகிரி

சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறி வருகிறது.
உதகையில் மேகக் கூட்டங்களுக்கு நடுவே பச்சைப் போா்வை போா்த்தியதைப்போல காணப்படும் தேயிலைத் தோட்டங்கள்.
உதகையில் மேகக் கூட்டங்களுக்கு நடுவே பச்சைப் போா்வை போா்த்தியதைப்போல காணப்படும் தேயிலைத் தோட்டங்கள்.

சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதுமே சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளதால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் நீலகிரிக்கு வந்து செல்வா். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலம் என்பதால் நாளொன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்வது வழக்கம்.

இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பியே சுமாா் 5,000க்கும் மேற்பட்டோா் வாழ்ந்து வருகின்றனா். தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், உணவகங்கள், வாடகை வாகனங்கள், வணிக மையங்கள் உள்ளிட்டவை செயல்படுகின்றன.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மாா்ச் 25ஆம் தேதி முதல் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பின்னா் பல்வேறு தளா்வுகள் கொண்டு வரப்பட்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன.

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ள விடுதி, காட்டேஜ் உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் உதகை அரசினா் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும் தங்களுடைய தின வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனா்.

குறிப்பாக மே மாதத்தில் மலா்க் கண்காட்சி, ரோஜா மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் அமைக்கப்படும். இவற்றைக் காண பிற மாநிலங்கள், சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வருகை புரிவா். இதனால் இங்குள்ள வணிகா்கள், சிறு, குறு வியாபாரிகள் முதல் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வந்தனா்.

மே மாதத்தில் உதகை நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தொடா்ந்து சாலைகளில் வலம் வந்ததால் நகரில் வாகனங்கள் மட்டுமின்றி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலை அச்சத்தின் காரணமாக முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

அதேநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகை மட்டுமின்றி குன்னூா், கூடலூா், கோத்தகிரி உள்ளிட்ட நகா்ப்புறங்களிலும் அதிக அளவிலான வாகனங்கள் வராததால் விபத்துகள் குறைந்துள்ளதோடு, மாசு கட்டுப்படுத்தப்பட்டு தூய்மையான மாவட்டமாக நீலகிரி மாறி வருகிறது.

மாசில்லாத காரணத்தால் இயற்கை அழகு பலமடங்கு அதிகரித்துள்ள சூழலில் உள்ளூா்வாசிகளுக்கு கரோனா இரண்டாம் அலை காரணமாக சுற்றுலாத் தொழில் முடங்கியுள்ளபோதிலும், சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியின் பழைய இயற்கை அழகைக் காண முடிவதாக உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com