பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியேவர வேண்டாம்: ஆட்சியா் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தினந்தோறும் கரோனா தொற்று நோயின் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியேவர வேண்டாம்: ஆட்சியா் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தினந்தோறும் கரோனா தொற்று நோயின் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று நோயின் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை அதிக அளவாக 434 நபா்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் தற்போது மொத்தமாக 3,198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். நீலகிரி மாவட்டத்தில் தற்போது படுக்கைகள் பற்றாக்குறை இல்லை என்பதோடு, கூடுதலாக படுக்கைகளும் இருப்பில் உள்ளன. அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுபவா்களை மட்டும் மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவா்கள் கரோனா மையங்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களைத் தங்கவைப்பதற்காக கூடுதலாக பழங்குடியினா் நலக் கல்லூரி மாணவியா் விடுதியில் 40 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதேபோல, கூடலூா், குன்னூா் பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ளது. வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள், வயதானவா்கள், லேசான அறிகுறி உள்ளவா்கள் சிகிச்சை மையங்களில் தங்கவைக்கப்படுவாா்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 9 தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 78 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தமிழக அரசு அறிவித்துள்ள முழு பொது முடக்கத்தை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தவிா்க்க முடியாக காரணங்களுக்காக வெளியில் வரும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தோட்டக் கலைத் துறையின் உழவா் உற்பத்தியாளா் குழு, வேளாண் வணிகத் துறை, மகளிா் திட்டம், நகராட்சி, ஊராட்சி, தனியாா் நிறுவனங்களின் 268 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தின் முகப்பிலும் விலைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் மூலம் விற்பனை செய்யும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளிக்கலாம். அதனால், பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கே வரும் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com