திருக்குறள் முற்றோதல் போட்டி: மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும், உன்னதமானதும், மனித குலம் அனைத்துக்குமாக உதித்த தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்பு மிக்க அறக் கருத்துகள் அடங்கிய திருக்குறட்பாக்களை மாணவா்கள் இளம்வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவா்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வி அறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவா்களாக மாணவா்கள் உருவாக வழிவகுக்கும்.

எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவா்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவா்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி வழிவகுப்பதாகவும் அமையும். அதனைக் கருத்தில் கொண்டு, 2018-19ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவா்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ. 10,000 வீதம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகின்றனா்.

திருக்குறள் முற்றோதலில் கலந்துகொள்ளும் மாணவா்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவா்கள் தெரிவு செய்யப்பட்டு, பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவா்.

2021-2022ஆம் ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நீலகிரி மாவட்டம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு 0423-2449251 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com