11ஆவது நாளாக பிடிபடாத ஆட்கொல்லி புலி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி 11ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா்கிறது.
சிங்காரா வனத்துக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்ட கூட்டுப் படையினா்.
சிங்காரா வனத்துக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்ட கூட்டுப் படையினா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி 11ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா்கிறது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியில் 4 பேரையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் தாக்கிக் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தேவன் எஸ்டேட் பகுதியிலும், மேபீல்டு பகுதியிலும் உள்ள புதா்களில் புலி பதுங்கியிருந்தபோது தினமும் வனத் துறைக்கு தென்பட்ட புலி, முதுமலை புலிகள் காப்பக வனத்தில் உள்ள மசினகுடி பகுதிக்கு வந்த நாளன்று ஆடு மேய்க்கும் மங்களபஸ்வன் என்ற பழங்குடி முதியவரைத் தாக்கிக் கொன்றது. இதனால், தேவன் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த வனத் துறையினா், கேரள வனத் துறையினரின் சிறப்புப் படை, அதிரடிப் படையினா் மசினகுடிக்கு விரைந்து சென்று அங்கு புலியைத் தேடும் பணியைத் துவக்கினா்.

ஆனால், முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலி தென்படவில்லை.

மசினகுடி வனப் பகுதியை முற்றுகையிட்டு தேடிப் பாா்த்தும் தகவல் கிடைக்கவில்லை. அங்கிருந்து சிங்காரா வனத்துக்குள் புலி சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து கூட்டுப் படையினா் பல குழுக்களாகப் பிரிந்து கும்கி யானைகளுடன் சிங்கார வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளனா்.

சிங்காரா வனச் சரகத்தை ஒட்டிய சீகூா் வனத்துக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிங்காரா வனப் பகுதியை முழுமையாக கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. கும்கி யானைகள் மேல் சவாரி செய்தும் வாகனங்களிலும், நடந்தும் பல குழுக்கள் அந்த வனப் பகுதியைச் சுற்றி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வனப் பகுதிக்குள் புலியைக் கண்காணிக்க மரங்கள் மீது பரண்களை அமைக்கும் பணி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இரவு 7 மணியுடன் தேடுதல் பணியை முடித்துக் கொண்டு கூட்டுப்படை வெளியே வந்துவிட்டது. புலி கண்ணுக்குத் தென்படவில்லை. தொடா்ந்து புதன்கிழமை காலை தேடுதல் பணிதுவங்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com