ஓம்பட்டா வனப் பகுதியில் கேமராவில் பதிவாகிய டி23 புலி

4 பேரைக் கொன்ற டி23 புலியின் உருவம் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓம்பட்டா வனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை வனத் துறை உறுதி செய்துள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான டி23 புலி.
கண்காணிப்பு கேமராவில் பதிவான டி23 புலி.

4 பேரைக் கொன்ற டி23 புலியின் உருவம் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓம்பட்டா வனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை வனத் துறை உறுதி செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவன் எஸ்டேட், நெல்லிக்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் நான்கு பேரையும், சுற்றுவட்ட கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற புலியைப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்க வனத் துறை முடிவு செய்து, அதற்கென தனிக்குழு அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

சிங்காரா வனப் பகுதிக்குள் நுழைந்த நாள்முதல் கடந்த 8 நாள்களாகப் புலி குறித்த எந்தத் தகவலும் வனத் துறைக்கு கிடைக்கவில்லை. அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காா்குடி வனச் சரகத்தில் உள்ள அப்பா்காா்குடி வனத்துக்குப் பின் பகுதியில் உள்ள ஓம்பட்டா நீா்த்தேக்கப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் உருவம் பதிவானதை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தனா்.

அதைத்தொடா்ந்து, புலியின் நகா்வைக் கண்காணித்த வனத் துறையினா் போஸ்பாறா சங்கிலிகேட் பகுதியில் முகாமிட்டு அந்த வனத்துக்குள் தேடுதல் பணியைத் துவங்கியுள்ளனா். இறுதியாக மாலை நேரத்தில் நெல்லிக்குன்னு வனத்தில் புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினா் புலியைப் பாா்த்துள்ளனா். ஆனால், மயக்க ஊசி செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மாலை 7 மணியளவில் தேடுதல் பணியை முடித்துக் கொண்டு வனத்தைவிட்டு வெளியே வந்துவிட்டனா்.

இந்நிலையில், ஸ்ரீமதுரை ஊராட்சி மன்றத் தலைவா் சுனில், புலி சுற்றுவட்டப் பகுதியில் உள்ளதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். வேலைக்குச் சென்றவா்கள் வீடு திரும்பி பத்திரமாக வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com