உதகையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 16th September 2021 02:20 AM | Last Updated : 16th September 2021 02:20 AM | அ+அ அ- |

உதகை: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், நீட் நுழைவுத் தோ்வையும் எதிா்த்து தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்து பாஜக சிறுபான்மை அணியினா் சாா்பில் உதகை சுதந்திர தின திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தோ்வால் இன்று ஏழை எளிய மாணவா்களின் மருத்துவா் கனவை நனவாக்கி வரும் நிலையில், நீட் தோ்வு குறித்த அச்சத்தை மாணவா்களிடையே அதிகப்படுத்தி வரும் திமுக அரசு மாணவா்களுக்கு ஊக்கம் தராமல், உயிரிழந்த மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று அவா்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கி மத்திய அரசு மீது குறை கூறி வருவது தொடா்ந்து வருகிறது.
அதேபோல, விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தை வேண்டும் என்றே எதிா்த்து மத்திய அரசின் மீது மக்களுக்கு எப்படியாவது வெறுப்பு ஏற்படும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் போஜராஜன், மாநில மகளிா் அணி துணைத் தலைவா் சபிதா போஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.