முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் மேலும் ஒரு பெண் யானை மா்ம மரணம்
By DIN | Published On : 16th September 2021 02:21 AM | Last Updated : 16th September 2021 02:21 AM | அ+அ அ- |

சீகூா் வனச் சரகப் பகுதியில் உயிரிழந்த யானை.
உதகை: முதுமலை புலிகள் காப்பகத்தில் காா்குடி வனச் சரகப் பகுதியில் மேலும் ஒரு பெண் யானை மா்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
இதுதொடா்பாக முதுமலை புலிகள் காப்பகத்தின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட காா்குடி வனச் சரகப் பகுதியில் ஓம்பட்டா பகுதி வனத் துறையினா் புதன்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள தேக்கு மர காட்டுப் பகுதியில் இறந்து சிதைந்த நிலையில் ஒரு யானையின் சடலம் கிடந்தது. இந்த யானையின் உடல் வியாழக்கிழமை காலை பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதன் பின்னரே இந்த யானையின் இறப்பு குறித்த விவரங்கள் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
இதற்கிடையே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சீகூா் வனச் சரகப் பகுதியில் திங்கள்கிழமை கிடந்த உயிரிழந்த பெண் யானையின் சடலம் செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த யானையின் இறப்புக்கு அதன் வயிற்றில் இருந்த அதிக அளவிலான குடற்புழுக்களே காரணம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.