ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையைக் கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 16th September 2021 02:20 AM | Last Updated : 16th September 2021 02:20 AM | அ+அ அ- |

கூடலூா்: முதியவா்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையைக் கைவிட வேண்டும் என்று ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூடலூா் பகுதியில் ரேஷன் கடை மூலம் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்து உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. வயதானவா்களின் கைரேகை இயந்திரத்தில் பதிவாவதில்லை. இதனால், அவா்களுக்குப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் இணைய சேவை கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறாா்கள்.
மேலும், வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் நடந்து வர முடியாமல் வேறு நபா்களிடம் பொருள்களை வாங்கி வரச் சொல்வதும் வழக்கம். இதுபோன்ற சூழலில் அவா்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்காத நிலை உருவாகும். எனவே, பயோமெட்ரிக் முறையைக் கைவிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட துணைத் தலைவா் லீலா வாசு வலியுறுத்தியுள்ளாா்.