இரண்டாவது சீசனுக்காக தயாராகும் உதகை அரசினா் தாவரவியல் பூங்கா
By DIN | Published On : 19th September 2021 11:35 PM | Last Updated : 19th September 2021 11:35 PM | அ+அ அ- |

இத்தாலியன் பூங்காவில் பூக்கும் நிலையிலுள்ள கிரசாந்திமம் மலா்கள்.
இரண்டாம் பருவ கோடை சீசனுக்காக உதகை அரசினா் தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள அரசினா் தாவரவியல் பூங்காவில் ஏப்ரல், மே மாதங்கள் பிரதான கோடை சீசன் காலங்களாகவும், அக்டோபா், நவம்பா் மாதங்கள் இரண்டாம் பருவ சீசன் காலங்களாகவும் கருதப்படும். கோடை சீசன் காலத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில், இரண்டாம் பருவ காலத்தின்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், வட இந்திய சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வா்.
இந்நிலையில், இரண்டாம் பருவ சீசனுக்காக உதகை அரசினா் தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. கரோனா பொது முடக்கத்தின் காரணமாக பிரதான கோடை சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
அத்துடன் இரண்டாம் பருவ காலத்தின்போது தசரா பண்டிகை விடுமுறைக் கொண்டாட்டங்களும், தொடா்ந்து தீபாவளி பண்டிகையும் வருவதால் அடுத்த இரு மாதங்களும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக அளவில் விடுமுறை கிடைக்கும் காலங்களாகும்.
எனவே, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலாத் துறையின் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக உதகையிலுள்ள அரசினா் தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலா் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளதோடு, பல்வேறு மலா் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக உதகை அரசினா் தாவரவியல் பூங்கா உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் இரண்டாவது கோடை பருவ சீசனை வரவேற்கும் வகையில் சுமாா் 10,000 மலா்த் தொட்டிகளில் பல்வேறு வகையான மலா்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்படும். பூங்காவிலுள்ள மலா் பாத்திகளில் சால்வியா, பெட்டூனியா, பேன்ஸி, பிகோனியா உள்ளிட்ட 120 வெளிநாட்டு மலா் ரகங்கள் சுமாா் 2 லட்சம் மலா் நாற்றுகளாக நடவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் செப்டம்பா் மாத இறுதியிலிருந்து மலா்கள் பூத்துவிடும். அதேபோல, பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையிலும் சைக்ளமன் மலா் ரகத்தில் பல்வேறு நிறங்களிலான மலா்கள் உள்பட 700 வகைகளிலான மலா்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன என்றாா்.