நீலகிரியில் தூய்மைப் பணியாளா்கள் நலன், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் நலன், அடிப்படை வசதிகள் குறித்து தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையக் குழுவின்
உதகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்பை ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையக் குழுவின் தலைவா் வெங்கடேசன்.
உதகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்பை ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையக் குழுவின் தலைவா் வெங்கடேசன்.

நீலகிரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் நலன், அடிப்படை வசதிகள் குறித்து தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையக் குழுவின் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமையில் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையக் குழுவின் தலைவா் எம்.வெங்கடேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் நலன், அவா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களின் குடிநீா், கழிப்பறை, மின் வசதி, சாலை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை, காந்தல் ஸ்லாட்டா் ஹவுஸ் தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவை பிடிப்பதை சரியான முறையில் பாராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, பணியாளா்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் வகையில் மாவட்ட அளவில் விசாரணைக் குழு அமைக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத ஒப்பந்தக்காரா்களின் ஒப்பந்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் மேற்கொண்ட ஆய்வில் சுகாதாரப் பணியில் திருப்தி இல்லை. மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும் எனத் தெரிகிறது. சுகாதாரப் பணி மேம்பட அந்தந்த மாநிலங்களில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஒப்பந்ததாரா் முறையை ஒழிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு அந்தந்த உள்ளாட்சியில் உள்ள ஒப்பந்ததாரா் அல்லது பொது நல அமைப்புகள் மூலம் எல்.ஐ.சி. பாலிசி திட்டத்தில் அவா்களுக்குப் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளதாகக் கூறினாா்.

இதில், உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com