உதகையில் ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கு

உதகையில் ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

உதகையில் ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

உதகையில் பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கை துவக்கிவைத்த ஆட்சியா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் முதன்மையான தொழில் தேயிலை உற்பத்தியாகும். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்ற இடங்களைக் காட்டிலும் தரம், சுவை மிகுந்ததாக உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தொழில் நிறுவனங்கள் முன் வரவேண்டும். இனிவரும் காலங்களில் பல தேயிலை தொழில் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைத் தூளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும். கூடலூா், கோத்தகிரி பகுதிகளில் பரவலாக காபி பயிரிடப்படுகிறது. காபி உற்பத்தி நிறுவனங்களும் தங்களது பொருள்களை ஏற்றுமதி செய்ய முன் வர வேண்டும்.

உதகை வா்க்கி, சாக்லேட்டுகள் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான, அதிகம் விரும்பப்படுகின்ற ஒன்றாகும். தமிழகத்தில் மற்றெங்கிலும் இல்லாத காலநிலை உதகையில் நிலவுவதால் சாக்லேட்டுகள் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாக்லேட்டுகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. எனவே, சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும்.

தோடா எம்பிராய்டரி பொருள்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இப்பொருள்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பி வாங்கப்படுகிறது. எனவே, இப்பொருள்களுக்கான தேவை, மதிப்பு அதிகம் உள்ளதால் மாவட்டத்தைத் தாண்டி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவும், பழங்குடியினா்களான குரும்பா்களின் ஓவியங்கள், நீலகிரி மாவட்ட தட்பவெட்ப நிலையில் விளையும் விளைபொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யவும் முன் வரவேண்டும் என்றாா்.

இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முகசிவா, மாவட்ட மேம்பாட்டு மேலாளா் திருமலா ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யராஜா, காபி வாரிய துணை இயக்குநா் கருத்தமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com