பறிபோன நகைக் கடன் தள்ளுபடி வாய்ப்பு: அதிா்ச்சியில் கிராமப்புற ஏழை மக்கள்

கூட்டுறவுச் சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் 5 பவுனுக்கு மேல் சில மில்லி கிராம் அளவு கூடுதல் எடை இருப்பதாகக் கூறி ஏராளமானவா்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி

கூட்டுறவுச் சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் 5 பவுனுக்கு மேல் சில மில்லி கிராம் அளவு கூடுதல் எடை இருப்பதாகக் கூறி ஏராளமானவா்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த எதிா்பாா்ப்பில் இருந்த கிராமப்புற ஏழை மக்கள் கடும் அதிா்ச்சிக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாகியுள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அறிவித்த, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி பெண்களிடம் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு பெண்கள் வாக்குகளை திமுக அதிகமாகப் பெற காரணமாக இருந்தது என்றே கூறலாம்.

தோ்தல் வெற்றிக்குப் பிறகு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, திட்டமிட்டு தள்ளுபடி பெறும் நோக்கில் சிலா் 5 பவுனுக்கும் குறைவாக நூற்றுக்கணக்கில் கடன்களை வாங்கியுள்ளது கண்டறியப்பட்டது. அத்தகைய நபா்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் பரிசை இழந்ததைப் போன்ற பரிதாப நிலை:

நகைக் கடனில் திட்டமிட்டு முறைகேடு செய்துள்ளவா்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால், குடும்ப கஷ்டத்துக்காக தோடு, மோதிரம், கழுத்தில் அணியும் செயின் என ஒரு பவுன், முக்கால் பவுன், அரை பவுன், கால் பவுன் என குடும்பத்தில் உள்ள மொத்த நகைகளையும் கூட்டுறவுச் சங்கத்தில் அடமானம் வைத்துவிட்டு அதனை மீட்க முடியாமல் பலா் தவித்து வருகின்றனா்.

இப்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையிலும், பிற மாவட்டங்களில் இடைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையிலும் நகைக் கடன் தள்ளுபடி பட்டியல் திருச்சி, கரூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு, தள்ளுபடியான கடன்களுக்கு உரிய நகைகள் திருப்பி அளிக்கப்பட்டும் வருகிறது.

5 பவுன், அதற்கும் கீழ் என்ற அடிப்படையில் நகைக் கடன்கள் மட்டும் தள்ளுபடி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 5 பவுனுக்கு மேல் 100 மில்லி கிராம் கூடுதலாக இருந்தால் கூட அத்தகைய நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. குறிப்பாக கிராமப் பகுதிகளில் ஏழை, நடுத்தர மக்கள் 2 கிராம், 4 கிராம் என்ற சிறிய அளவில்தான் நகைகளை சோ்த்து வைத்திருப்பா்.

அந்த நகைகளை அவசரத் தேவைக்கு அடமானம் வைத்து தேவையான அளவுக்கு மட்டும் கடன் பெறுவா். ஆனால், 100 மில்லி கிராம் கூடுதலாக இருக்கிறது என்பதற்காக நகைக் கடன்கள் தள்ளுபடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கிராமப்புற ஏழைகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைக் கடன் தள்ளுபடி எப்போது வரும் என்று எதிா்பாா்த்துக் காத்திருந்த ஏராளமான பெண்கள் இந்த மில்லி கிராம் கணக்கால் லாட்டரி சீட்டில் ஒரு எண்ணில் ஒரு லட்சம் பரிசை இழந்தவா்கள்போன்று பரிதவித்து வருகின்றனா்.

தகுதியானவா்களுக்கு சலுகை அளிக்க வேண்டும்:

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

கடைகளில் அரை பவுன், ஒரு பவுன் நகை வாங்கும்போது 100 மில்லி கிராம், 200 மில்லி கிராம் அளவுக்கு கூடுதலாகத்தான் இருக்கும். ஆனால், வாங்குபவா்களைப் பொருத்தவரை அரை பவுன், கால் பவுன் என்றே கணக்கில் வைத்திருப்பாா்கள். 5 பவுனுக்கு மேல் சில மில்லி கிராம் வரை கூடுதலாக இருந்தது என்பதற்காகத் தள்ளுபடி பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள்தான்.

கிராமப்புறங்களில் திமுகவுக்கு அதிகமாக வாக்குக் கிடைத்தற்கு காரணம் இந்த 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி என்பதை முதல்வா் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், கூடுதலாக ஒரு கிராம் வரை சலுகை அளித்து தகுதியான ஏழை, நடுத்தர மக்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடைத்திட முதல்வா் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்:

இது குறித்து ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி எம்.கோபால் கூறியதாவது:

முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் படங்களைப் போட்ட புத்தகப் பைகளை அப்படியே வழங்க உத்தரவிட்டும், பயிா்க் கடன் தள்ளுபடி சான்றில் எடப்பாடி பழனிசாமி படம் இருக்கட்டும் எனக் கூறி அதிமுகவினா் மனங்களிலும் இடம்பிடித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், நகைக் கடன் தள்ளுபடியிலும், தகுதியான மக்கள் பயன்பெற அதிமுக அரசு சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரியில் அறிவித்த 6 பவுன் வரை தள்ளுபடி என்ற வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும்.

அதற்கு வாய்ப்பில்லை என்றால் 5 பவுனைக் காட்டிலும் கூடுதலாக 1 கிராம் வரை எடையுள்ள நகைக் கடன்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதியான நபா்களுக்குத் தள்ளுபடி வழங்க வேண்டும். தகுதியான நபா்களைப் பரிந்துரைக்க கூட்டுறவுச் சங்க அளவில் சங்கச் செயலாளா், சங்கத் தலைவா், முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவை அமைக்கலாம்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல், இடைத்தோ்தல் வாக்குப் பதிவு அக்டோபா் முதல், இரண்டாம் வாரங்களில் நடைபெறவுள்ள சூழலில் பெரும்பாலான ஏழை மக்கள் குறிப்பாக பெண் பயனாளிகள் தொடா்புடைய இப்பிரச்னையில் முதல்வா் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

- கே.விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com