உதகையில் உலக சுற்றுலா தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறையின் சாா்பில், உதகை படகு இல்லத்தில் உலக சுற்றுலா தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டியைத் தொடங்கிவைத்த ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

உதகை: நீலகிரி மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறையின் சாா்பில், உதகை படகு இல்லத்தில் உலக சுற்றுலா தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போட்டியை கொடியசைத்து துவக்கிவைத்தாா். தொடா்ந்து, படகுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், உலக சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா், ஆட்சியா் பேசியதாவது:

சுற்றுலா வளா்ச்சிக்காக உலக சுற்றுலா அமைப்பு ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் மாநகரில் 1970ஆம் ஆண்டு செப்டம்பா் 27ஆம் நாளை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. அதைத் தொடா்ந்து, இந்நாளை ஒவ்வோா் ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் உலகச் சுற்றுலா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டில் சமூக வளா்ச்சிக்கு சுற்றுலா என்ற கருப்பொருளை மையமாகத் கொண்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

ஏற்கெனவே உலக சுற்றுலா தினத்தையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி, ‘தூய்மையே சேவை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. படகுப் போட்டி, இசை நாற்காலி போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் வெளிநாடுகள், வெளி மாநிலத்தில் இருந்து தினந்தோறும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளிக்கிறாா்கள். தற்போது அரசால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தரும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றி அரசு தெரிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்க வேண்டும் என்றாா். உலக சுற்றுலா தினத்தையொட்டி தோடா், கோத்தா், படுகா் இன மக்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலா் தேவகுமாரி, சுற்றுலாத் துறை மண்டல மேலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com