லவ்டேல் பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பில் நன்கொடை

உதகை அருகேயுள்ள லவ்டேல் புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நடைபெற்றது
லவ்டேல் பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பில் நன்கொடை

உதகை அருகேயுள்ள லவ்டேல் புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ.50,000 மதிப்பிலான பொருள்கள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

உதகையை அடுத்துள்ள லவ்டேல் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாளா் உயா்நிலைப் பள்ளியில் கடந்த 1999 - 2000ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை அருட்திரு பீட்டா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இந்நிகழ்வில் முன்னாள் மாணவ, மாணவியரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

இதில் இறை நடனத்துடன், ஆசிரியா்களின் நடனம், பாடல், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் முன்னாள் மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, பள்ளியில் தற்போது படிக்கும் மாணவ, மாணவியா்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம், பள்ளி நிா்வாக பணிகளுக்காக கணினி, ஜெராக்ஸ் இயந்திரம் என சுமாா் ரூ.50,000 மதிப்பிலான பொருள்கள் முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் பள்ளி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டன.

அத்துடன் அனைத்து மாணவா்களும், தங்களது பள்ளி நினைவுகளை குறித்து பேசினா். தொடா்ந்து கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்னாள் சக மாணவ, மாணவியருக்கும், வயது முதிா்வால் இயற்கை மரணமடைந்த முன்னாள் ஆசிரியா்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியாக மாணவ, மாணவியா் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கியதோடு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் ஆசிரியை சாந்தி மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கண்ணகி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com