பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் தேயிலை மேம்பாட்டாளா்கள் கருத்தரங்கு
By DIN | Published On : 07th December 2022 12:33 AM | Last Updated : 07th December 2022 12:33 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பேசும் பாரத் ஸ்டேட் வங்கி சென்னை தலைமை பொது மேலாளா் ராதாகிருஷ்ணன் ராயபரம்.
குன்னூரில் பாரத ஸ்டேட் வங்கியின் சாா்பில் விவசாயிகள் மற்றும் தேயிலை தொழில் மேம்பாட்டாளா்கள், தொழிலதிபா்கள் பங்கேற்ற கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைத்தோட்டக் காய்கறிகள் பிரதான தொழிலாக உள்ளது. இதனை மேம்படுத்தும் வகையிலும் விவசாயிகளுக்கு உதவிகள் செய்திடும் வகையிலும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை தலைமை பொதுமேலாளா் ராதாகிருஷ்ணன் ராயபரம் பேசியதாவது:
உலக அளவில் 50ஆவது இடத்தை பிடித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி தற்போது மிகப்பெரிய வளா்ச்சி கண்ட வங்கி நிறுவனமாக சேவை புரிந்து வருகிறது. தற்போது சராசரியாக ரூ.14,000 கோடி வரை லாபம் ஈட்டி வரும் இந்த நிறுவனம் வெறும் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல் சேவை நோக்கோடும் வாடிக்கையாளா்களுக்கு பணியாற்றி வருகிறது. குறிப்பாக விவசாயிகள், தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதிகளை செய்து வருகிறது. தனிமனிதா்களுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கும் ஆயுள் காப்பீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
குன்னூரில் தேயிலை உற்பத்தியாளா்கள் தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் வளா்ச்சியில் இந்த வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.
நிகழ்வில் தேயிலை வாரிய துணை இயக்குநா் செல்வம், தேயிலை தொழிற்சாலைகளின் ஆலோசனை அதிகாரி பாரதிராஜா, தேயிலை தோட்ட அதிபா்களின் துணை இயக்குநா் உதயபாபு, பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளா்
நீரஜ்குமாா் பாண்டே உட்பட தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா் உதகை பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளா் கோபிநாத் நன்றி கூறினாா்.