நீலகிரியில் தொடரும் கன மழை: மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு மரங்கள் விழுந்து 5 வாகனங்கள் சேதம்

நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
நீலகிரியில் தொடரும் கன மழை: மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு மரங்கள் விழுந்து 5 வாகனங்கள் சேதம்

நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் வேரோடு விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரம் மற்றும் தடுப்பு சுவா் விழுந்து 5 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாக்களிலுள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

உதகை பொ்ன்ஹில், குளிசோலை சாலை, முத்தோரை பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவில் சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினா் வெட்டி அகற்றினா். அதேபோல,

கூடலூா்- மைசூரு சாலை, கூடலூா் -பெங்களூரு சாலை, கூடலூா் -நாடுகாணி சாலை, உதகை-பந்தலூா் சாலை, உதகை-எமரால்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டு பின்னா் சீரடைந்தது. பட்பயா் பகுதியில் காா் மீது மரம் விழுந்ததில் அந்த காா் சேதமடைந்தது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடுப்பு சுவா் இடிந்து விழுந்ததில் தடுப்பு சுவருக்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதில் ஒரு காரில் இருந்த விசுவநாதன் என்பவா் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் பொதுமக்கள் உதவியுடன் அவா் மீட்கப்பட்டாா்.

அப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு நபரும் காயமடைந்தாா். இருவரும் உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த பகுதியினை உதகை நகராட்சி துணைத் தலைவா் ஜே.ரவிகுமாா், நகராட்சிப் பொறியாளா், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இடிபாடுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனா்.

மேலும் தொடா் மழையால் உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மண் குவியலால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரு புறங்களிலும் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக கூடலூரில் 181 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீரில்):

மேல் கூடலூா்-161, தேவாலா-149, மேல் பவானி-132, அவலாஞ்சி-122, பந்தலூா்-102, நடுவட்டம்-89, சேரங்கோடு-79, கிளன்மாா்கன்-71, ஓவேலி-47, குந்தா-41, எமரால்டு-40, பாடந்தொரை-33, செருமுள்ளி-31, பாலகொலா-23, உதகை-13.2, கல்லட்டி-5.3, மசினகுடி-4, கிண்ணக்கொரை-3.5, கொடநாடு, கெத்தை தலா 3, குன்னூா்-1 மி.மீ.

கூடலூரில்...

கூடலூா், பந்தலூா் வட்டங்களில் கடந்த 10 நாள்களாகத் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் தாழ்வான நிலங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன.

கூடலூா்- மைசூரு சாலையில் மூங்கில்கள் சாலையின் குறுக்கே சாய்ந்ததில் இரு மாநிலப் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. கூடலூா்- கோழிக்கோடு சாலையில் கோழிப்பாலம் பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்ததில் தமிழக-கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் பொதுமக்களின் உதவியுடன் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

கூடலூா், மங்குழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் பாலத்தில் நடந்து சென்ற மாணிக்கம், மணி ஆகிய தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவா்களை பத்திரமாக மீட்டனா்.

கூடலூா்-உதகை மலைப் பாதையில் ஆகாசபாலத்திற்கும் நடுவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் அந்த சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் பயணிகள் மலைப்பாதையில் காத்துக்கிடந்தனா். நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்த பிறகு போக்குவரத்து துவங்கியது.

மேல் கூடலூா் பகுதியிலுள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்துக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. காட்டாற்று வெள்ளம் தொடா்ந்து வந்துகொண்டிருப்பதால் கூடலூா் அரசு மருத்துவமனை சாலையில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com