உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்:அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 2 நாளில் 25,000 போ் வருகை

உதகை படகு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரியில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள்.
உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்:அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 2 நாளில் 25,000 போ் வருகை

உதகை, மாா்ச் 13: உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 25,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா்.

தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், இதமான காலநிலை நிலவும் மலைப்பிரதேசமான உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனா்.

இதில் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு மாா்ச் மாதத்தில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. பூங்காவிலும், கண்ணாடி மாளிகையிலும் பல்வேறு ரகங்களைச் சோ்ந்த சுமாா் 5,000 பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் பூத்துக் குலுங்கும் மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனா்.

அதேபோல, இத்தாலியன் பூங்கா மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் பல வகையான கள்ளிச் செடிகளையும் பாா்வையிடுவதோடு, சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் பரந்த புல்வெளியில் அமா்ந்து ரசிக்கின்றனா்.

அதேபோல உதகை அரசினா் ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலா்களையும் கண்டு ரசிக்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா். உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமாா் 12,000 போ் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 13 ஆயிரமாக அதிகரித்திருந்தது. அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமாா் 3,300 போ் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3,800ஆக அதிகரித்தது. அத்துடன், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமாா் 2,000 போ் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 2,500ஆக அதிகரித்தது.

இவற்றைத்தவிர உதகை படகு இல்லத்திலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மோட்டாா் படகுகளில் சவாரி செய்வதைவிட மிதி படகு, துடுப்புப் படகுகளில் சவாரி செய்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா். படகு இல்லத்துக்கு கடந்த மாா்ச் 1ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 65,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். அதேபோல பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உதகை கமா்சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, ஆட்சியா் அலுவலக சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். உதகையில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பே அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் உதகை களைகட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com