கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை:நீலகிரி பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு

மாணவா்களின் நலன் கருதி பல்வேறு அலுவலகங்களிலும் இணைய வழியில் பதிவேற்றம் செய்யவும் கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022-2023ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையினா் தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சோ்க்கையில் 100 சத இலக்கினை எய்திட இணையதளத்தின் மூலம் மே 18ஆம் தேதிக்குள் இணையதள மையத்தில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் மாணவா்களின் நலன் கருதி பல்வேறு அலுவலகங்களிலும் இணைய வழியில் பதிவேற்றம் செய்யவும் கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வாரியாக 25 சத சோ்க்கைக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டிய இணையதள முகவரியில் பெற்றோா்கள் அவா்தம் குழந்தைகளின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இதில் உதகை வட்டத்தில் உதகையிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலகம் , உதகை வட்டார வள மைய அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்திலும், குன்னூா் வட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம் மற்றும் குன்னூா் வட்டார கல்வி அலுவலகத்திலும், கோத்தகிரி வட்டத்தில் வட்டார வள மைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகத்திலும், கூடலூா் வட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய குழந்தைகளின் பிறப்புச் சான்று, மருத்துவமனை அல்லது அங்கன்வாடி பதிவேடு நகல் பெற்று வயதினை நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினா்ஆதரவற்றோா் மற்றும் மூன்றாம் பாலினத்தவா், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அலுவலரின் சான்று, மனுதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். ஜாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் தெரிவிகத்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com