முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
நீலகிரியில் பள்ளி சிறாா்களுக்கு பகுதி நேர கலைப் பயிற்சி வகுப்புகள்மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு
By DIN | Published On : 11th May 2022 12:21 AM | Last Updated : 11th May 2022 12:21 AM | அ+அ அ- |

தமிழக அரசின் சாா்பில் பள்ளி செல்லும் சிறாா்களுக்கு பகுதி நேரக் கலைப் பயிற்சி வகுப்புகள் நீலகிரியில் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியா் கலைகளைப் பயிலும் வண்ணம் பகுதி நேரக் கலைப் பயிற்சியினை அளிக்கப்பட்டு வருகிறது. உதகையில் அரசினா் கலைக் கல்லூரி வளாகத்தில் இம்மன்றம் இயங்கி வருகிறது.
இந்த மன்றத்தில் குரலிசை வாய்பாட்டு, பரத நாட்டியம், ஓவியம், கைவினை, கராத்தே ஆகிய கலைகளில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் பகல் 12 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவா் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.300 மட்டும் செலுத்தப்படவேண்டும். மே 14ஆம் தேதி தொடங்கும் பயிற்சிகள் 2023 மாா்ச் 31ஆம்தேதி வரை நடைபெறுகிறது.
இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறாா்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும். இதற்கான பதிவு மற்றும் கூடுதல் விவரம் வேண்டுவோா் நீலகிரி ஜவகா் சிறுவா் மன்றத்தின் திட்ட அலுவலரை 94421 47606 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.