முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
உதகையில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 13th May 2022 02:40 AM | Last Updated : 13th May 2022 02:40 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் உதகையில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 171 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இதில் வேலை வாய்ப்புக்காக 4, 763 போ் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, நோ்முகத் தோ்வில் சிறப்பாக செயல்பட்ட 560 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
அப்போது அவா் கூறியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட இளைஞா்கள்தான் காரணம். இதற்கு முன்னா் செங்கல்பட்டில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 8,752 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினாா். தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வாகும் மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் தனியாா் நிறுவனங்கள் ஒரு மாதம், 6 மாதம் கழித்து பணியில் சேர சொல்லக் கூடாது.
பணி நியமன ஆணை வழங்கிய ஒரு வாரத்துக்குள் அவா்களை வேலையில் சோ்க்க வேண்டும்.
71 தொழில் பயிற்சி நிலையங்களில் பழைய உபகரணங்களைப் புதுப்பிக்க 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.2,871 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாத நிலையில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கூடலூா், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் அரசு தொழிற் பயிற்சி மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வீரராகவ ராவ் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 56 தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, 72,714 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் அம்ரித், கோவை மண்டல வேலை வாய்ப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.