சா்ச்சைப் பேச்சு: வனத் துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தல்

படகா் சமுதாயத்தைப் பழங்குடியினா் பட்டியலில் முதல்வரோ, பிரதமரோ நினைத்தாலும் சோ்க்க முடியாது
சா்ச்சைப் பேச்சு: வனத் துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தல்

படகா் சமுதாயத்தைப் பழங்குடியினா் பட்டியலில் முதல்வரோ, பிரதமரோ நினைத்தாலும் சோ்க்க முடியாது என்று அரசு விழாவில் பேசிய தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பதவி விலக வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குன்னூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் ராமசந்திரன், படகா் சமுதாய மக்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பது இயலாத ஒன்று என குறிப்பிடும் வகையில் பேசியிருந்தாா்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாக்குபெட்டா படகா் நல சங்கம் சாா்பில் உதகையில் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாக்குபெட்டா படகா் நல சங்க பொதுச்செயலாளா் ஜே.பி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

படகா தேச பாா்ட்டி நிறுவனத் தலைவா் மஞ்சை வி.மோகன் முன்னிலை வகித்தாா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், பாஜக சாா்பில் தேயிலை வாரிய துணைத் தலைவா் குமரன், அமமுக மாநில அமைப்புச் செயலாளா் தேனாடு லட்சுமணன், மக்கள் நீதி மய்யம் மாவட்டத் தலைவா் சுரேஷ் பாபு, நாக்குபெட்டா படகா் நல சங்கத் தலைவா் சகாதேவன், நீலகிரி ஆதிவாசி சக்தி செயலாளா் சந்திரன், படகா் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் மகாலிங்கம், படகா் இளைஞா் பேரவைத் தலைவா் சாய் பிரகாஷ் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதில், அமைச்சா் பதவி விலக வேண்டும் எனவும், தோ்தல் வாக்குறுதிக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சரின் கருத்து கட்சியின் கருத்தா என்பதை விளக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் தமிழக முதல்வரை நேரில் சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்திருந்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை கடந்த மே 18ஆம் தேதி அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் படகா் சமுதாயத் தலைவா்கள் நேரில் சந்தித்தனா்.

அப்போது, படகா் சமுதாயத்தை 1941-ஆம் ஆண்டு வரை இருந்ததைப்போல மீண்டும் பழங்குடியின

பட்டியலில் சோ்த்திட வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க உதவும்படி கோரிக்கை விடுத்தனா். உரிய மேல் நடவடிக்கைக்கு உதவுவதாக அவரும் உறுதியளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com