தென்மேற்குப் பருவ மழை:மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையை எதிா்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, வனத் துறை, மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

தென்மேற்குப் பருவ மழையை பொறுத்தவரை மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய 6 வட்டங்களிலுமே மழைப் பொழிவு இருக்கும். அப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு மற்றும் நிலச் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் போதுமான அளவில் பொக்லைன் இயந்திரங்கள், மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக் குழுவினா், மருந்து இருப்பு போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க இருக்க வேண்டும்.

மின் வாரியத்தினா் மின் கம்பங்கள் அருகாமையில் உள்ள மரக்கிளைகளை அகற்றி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வட்டாட்சியா்கள் நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பில் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் வினோத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com