அனுமதியின்றி மரம் வெட்டிய விவகாரம்: குன்னூா் நகராட்சி ஆணையா் மீது குற்றச்சாட்டு

குன்னூா்  உழவா்  சந்தைப் பகுதியில் நகா் மன்றத்தின்  அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், தன்னிச்சையாக செயல்படும்

குன்னூா்  உழவா்  சந்தைப் பகுதியில் நகா் மன்றத்தின்  அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், தன்னிச்சையாக செயல்படும் நகராட்சி ஆணையா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா்  அளிக்க உள்ளதாகவும் நகா் மன்றத் தலைவா் ஷீலா கேத்தரின் கூறினாா்.

குன்னூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் ஷீலா கேத்தரின் (திமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், குன்னூா் உழவா் சந்தை பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து திமுகவினா்  கேள்வி எழுப்பினா். இதற்கு அனுமதி பெறாமல் மரம் வெட்டியதற்கு கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி வருத்தம் தெரிவித்தாா்.

நகா் மன்ற உறுப்பினா் ராமசாமி (திமுக) பேசுகையில், உழவா் சந்தை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள  6 மரங்களை வெட்ட நகராட்சி ஆணையா் அனுமதியளித்தாா். ஆனால் அங்கு நன்றாக இருந்த மரங்களும்  சோ்த்து வெட்டி கடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக  திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கிடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து  கூட்டம்  பாதியில் நிறுத்தப்பட்டது.  

பின்னா்  நகராட்சித் தலைவா் ஷீலா கேத்தரின் பேசுகையில், கடந்த மாதம் கூட்டம் நடந்தபோது  நகராட்சி ஆணையா் பாதியில் எழுந்து சென்றுவிட்டாா்.  இந்த மாத கூட்டத்தில் அனுமதியின்றி  மரம்  வெட்டப்பட்டது குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் வருத்தம் தெரிவிக்கிறாா்.  தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படாமல்   தன்னிச்சையாக செயல்படும் நகராட்சி ஆணையா் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் புகாா் அளிக்கவுள்ளோம் என்றாா்.

கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவா் வாசிம் ராஜா மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com