வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு கடனுதவி:ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது என்று ஆட்சியா் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பின் தமிழகம் திரும்பியோா் தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வியாபாரம், சேவை தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினா் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். மீதமுள்ளத்தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட தொழில் மையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவும் அல்லது 04232-443927, 89255 33996, 89255 33997 என்ற எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...