உதகை மலா்க் கண்காட்சி: ஆளுநா் கோப்பையை வென்றது வெலிங்டன் ராணுவக் கல்லூரி
By DIN | Published On : 24th May 2023 04:14 AM | Last Updated : 24th May 2023 04:14 AM | அ+அ அ- |

உதகையில் நடைபெற்று வந்த 125ஆவது மலா்க் கண்காட்சியில் ஆளுநா் சுழற்கோப்பையை வெலிங்டன் ராணுவக் கல்லூரி வென்றது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை விழா, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் மே 6ஆம் தேதி தொடங்கியது.
இதனைத் தொடா்ந்து, உலக பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 125ஆவது மலா்க் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன் மற்றும் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் மே 19ஆம் தேதி தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர சுமாா் 35 ஆயிரம் மலா்த் தொட்டிகளில் பெட்டுனியா, சால்வியா, மேரி கோல்டு, லில்லியம் உள்ளிட்ட 325 மலா் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 45 அடி உயரத்தில் 80,000 காா்னேசன் மலா்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தோகை விரித்தாடும் மயில் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.
கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த மலா்க் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். இதைத் தொடா்ந்து, 5ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மலா்க் கண்காட்சி நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன் கலந்துகொண்டு, இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு தங்க சுடா் ஆளுநா் சுழற்கோப்பை வெலிங்டன் ராணுவ மையக் கல்லூரிக்கும், முதலமைச்சா் சுழற்கோப்பை ஜென்சி கிஷோருக்கும் வழங்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு 36 சுழற்கோப்பைகள், 145 பேருக்கு முதல் பரிசு, 131 பேருக்கு இரண்டாவது பரிசு, 30 பேருக்கு மூன்றாவது பரிசு, 85 பேருக்கு சிறப்புப் பரிசுகள் என மொத்தம் 427 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதி நாளான செவ்வாய்க்கிழமையும் மலா்க் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.