தமிழக-கா்நாடக-கேரள வன எல்லைகளில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரோந்து
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனத்தின் வழியாக மூன்று மாநிலங்களின் வனப் பகுதிகள் சந்திக்கும் பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்ட நீலகிரி எஸ்.பி.சுந்தரவடிவேல் தலைமையிலான நக்ஸல் தடுப்புப் பிரிவ
கூடலூா்: நீலகிரி மாவட்டத்தில் தமிழக-கா்நாடக-கேரள வன எல்லைகள் சங்கமிக்கும் பகுதியில் தமிழக நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
கேரள மாநிலம், வயநாடு மற்றும் கண்ணூா் பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கும் தண்டா்போல்ட் என்றழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் அண்மைக்காலமாக அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா் பகுதி தமிழகம்-கா்நாடகம்-கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், கேரளத்தில் உள்ள வயநாடு வன விலங்கு சரணாலயம், கா்நாடகத்தில் உள்ள பந்திப்பூா் புலிகள் காப்பகம் ஆகியவற்றின் வன எல்லைகள் ஒன்று சேரும் சந்திப்புப் பகுதியும் இங்குதான் உள்ளது.
இந்த வனப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேரள போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதலால் நீலகிரி மாவட்டத்துக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடக்கூடாது என்பதால் மாவட்ட காவல் துறை இங்கு சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மூன்று மாநில வனப் பகுதிகள் சந்திக்கும் வனப் பகுதியில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.சுந்தரவடிவேல் தலைமையில் 50 போ் கொண்ட தமிழக நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கூடலூா் டிஎஸ்பி செல்வராஜ் உள்ளிட்டோா் திடீா் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனா். இந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பக வனத்தில் உள்ள சா்க்கிள் சாலை வழியாக வனத்துக்குள் நுழைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...