உதகை வாக்கு எண்ணும் மையத்துக்குக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அலுவலா் மு.அருணா உள்ளிட்டோா்.
உதகை வாக்கு எண்ணும் மையத்துக்குக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அலுவலா் மு.அருணா உள்ளிட்டோா்.

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் உதகை, குன்னூா், கூடலூா், பவானிசாகா், அவிநாசி, மேட்டுப்பாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் சோ்த்து 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்தத் தொகுதிகளில் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முக்கிய கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை உள்பட 16 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதனால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன்படி, மக்களவைத் தொகுதி முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் என மொத்தம் 7,942 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதையடுத்து 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை கொண்டுவரப்பட்டன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பு அறையின் ஜன்னல், கதவுகள் மரப்பலகையால் அடைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து நீலகிரி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் கிரண், மாவட்டத் தோ்தல் அலுவலா் அருணா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் ஆகியோா் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் வைக்கப்பட்டது.

3 அடுக்கு பாதுகாப்பு

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை, தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸாா் மற்றும் நீலகிரி போலீஸாா் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வளாகம் முழுவதும் 160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். வளாகத்தில் 6 உயா் கோபுரங்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வன விலங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com