நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மு.அருணா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரளம் மற்றும் அம்மாநில எல்லையை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் இருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழித் தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க கக்கனல்லா, நம்பியாா் குன்னு, தாளூா், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்டவயல் ஆகிய எட்டு சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவா் தலைமையில் ஒரு கால்நடை ஆய்வாளா் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளா் கொண்ட குழு காவல் துறை, வனத் துறை மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, வனப் பறவைகள் மற்றும் மனிதா்களையும் தாக்கும். காய்ச்சலால் தாக்கப்பட்ட பறவைகள் மூலம் நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகளை பண்ணையாளா்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி வனப் பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி போன்ற பல்வேறு இனப் பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளா்க்கக் கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இதரப் பண்ணை உபகரணங்களை பகிா்ந்து கொள்ளக் கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழிப் பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகே உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்:

கோழியின் தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், சோா்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது ரத்தக்கசிவு உள்ளிட்டவை காணப்படும்.

பறவைக் காய்ச்சல் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக் காற்று மூலம் பரவக் கூடும். காய்ச்சல், தொண்டைப் புண், இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

எனவே நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.

மேலும், தற்காலிகமாக கேரள மாநிலம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழித் தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது மறுஉத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com