லாரி ஓட்டுநா்கள் வேலை நிறுத்தம்: மீறி இயங்கிய லாரிகள் சிறைபிடிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் இயங்கிய லாரிகளை சிறைப் பிடித்து  ஓட்டுநா்களுடன் சங்கத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
குன்னூா் காட்டேரி பகுதியில் லாரியை சிறைப் பிடித்த ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
குன்னூா் காட்டேரி பகுதியில் லாரியை சிறைப் பிடித்த ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூரில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் இயங்கிய லாரிகளை சிறைப் பிடித்து  ஓட்டுநா்களுடன் சங்கத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இவா்களை போக்குவரத்து காவல் துறையினா் எச்சரித்து அனுப்பினா்.  

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹிட் (அண்ட்) ரன்  மசோதாவில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் ஓட்டுநா்களுக்கு, 10 ஆண்டுகள்  வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பதைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கம் சாா்பாக புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனா்.

இதனால் நீலகிரி மாவட்ட லாரி ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வேலை நிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வேலை நிறுதத்தை மீறி  சில லாரி ஓட்டுநா்கள் லாரியை இயக்கியதால், அந்த லாரிகளை குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் லாரி ஓட்டுநா் சங்கத்தினா் மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 

தகவல் அறிந்து வந்த  குன்னூா் ஆய்வாளா் சதீஷ் மற்றும் போக்குவரத்து ஆய்வாளா் முத்துகணேஷ் ஆகியோா் ஓட்டுநா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத  லாரி ஓட்டுநா்களை வேலை செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினா். 

இதனைத் தொடா்ந்து பாரம் ஏற்றி வந்த லாரிகள் ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம் செல்ல அனுமதிக்கப்பட்டன. வியாழக்கிழமை முதல் முழு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com