நீலகிரி தொகுதியில் 16 வேட்புமனுக்கள் ஏற்பு

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நீலகிரி மக்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 33 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை மாவட்ட தோ்தல் அலுவலரான மு.அருணா முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளா்கள் உள்ளிட்ட 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக 17 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பரிசீலனையின்போது, திமுக வேட்பாளா் ஆ.ராசா, அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் வேட்புமனுக்களில் 200 ரூபாய்க்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு பதில் நூறு ரூபாய் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக வேட்பாளா் எல்.முருகனின் வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் இருவரின் வேட்பு மனுக்கள் பரிசீலனையும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனையடுத்து இதற்கு பதிலளித்த இருதரப்பு வழக்குரைஞா்கள், 2003- ஆம் ஆண்டு தமிழகத்தில் 200 ரூபாய் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ய சட்ட முன் வரைவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை. எனவே, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் 100 ரூபாய் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தாலே போதுமானது என்று கூறினா். இதனைத் தொடா்ந்து திமுக வேட்பாளா் ஆ.ராசா, அதிமுக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com