ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை  செய்யாத பறக்கும்படை அதிகாரி பணியிடை நீக்கம்

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை  செய்யாமல் அனுப்பிய பறக்கும்படை அதிகாரியை மாவட்ட தோ்தல் அலுவலா் மு.அருணா சனிக்கிழமை பணியிடை நீக்கம்  செய்து உத்தரவிட்டாா். நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஆ.ராசா, சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், திமுக மாவட்டச் செயலாளா் பா.மு. முபாரக் ஆகியோா் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக உதகைக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவா்களது வாகனத்தை நிறுத்தி பறக்கும்படை அலுவலா் கீதா தலைமையிலான குழுவினா் சோதனையிட்டனா். அப்போது வாகனத்தில் பணமோ, பரிசுப் பொருளோ இல்லை எனக் கூறி வாகனத்தை அனுப்பிவைத்தனா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் பறக்கும்படைக் குழுவினா், ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக  சோதனை  மேற்கொள்ளவில்லை என்று புகாா்  எழுந்தது. இது குறித்து  மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மு.அருணா  தலைமையில் தோ்தல் அலுவலா்கள்  சனிக்கிழமை மேற்கொண்ட விசாரணையில், வாகன சோதனை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 134-இன் கீழ் பறக்கும் படை அலுவலா் கீதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தோ்தல் அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com