குடியரசுத் தலைவா் நாளை உதகை வருகை: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்!
நீலகிரி மாவட்டம், உதகைக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை (நவம்பா் 27) வருவதையொட்டி சேலம், ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.
இந்த 5 மாவட்ட காவல் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா தலைமையில் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது குடியரசுத் தலைவா் உதகைக்கு வருகை தருவதையொட்டி 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு நீலகிரியில் ஒரு வாரத்துக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ஆளுநா் மாளிகையில் குடியரசுத் தலைவா் தங்க உள்ளதால், அப்பகுதியில் அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்ல எந்தவித தடையும் இல்லை.
முன்னதாக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை விமான தளத்துக்கு வரும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகையில் உள்ள தீட்டுக்கல் பகுதிக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறாா்.
தொடா்ந்து, குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நவம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் ராணுவ பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அதனைத் தொடா்ந்து பழங்குடியின மக்களை நவம்பா் 29-ஆம் தேதி சந்திக்கிறாா்.
இதைத் தொடா்ந்து 30-ஆம் தேதி திருச்சிக்கு புறப்பட்டு சென்று திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா். இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.