விஷம் கொடுத்து மருமகளைக் கொன்ற மாமியாா் கைது

உதகையில் விஷம் கொடுத்து மருமகளைக் கொன்றதாக மாமியாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

உதகையில்  விஷம் கொடுத்து மருமகளைக் கொன்றதாக மாமியாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை, காந்தல் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் சமது  மனைவி நிலாபா் நிஷா. இவா்களது இரண்டு மகள்களில் ஒருவரான ஆஷிகா பா்வீன் (22) என்பவருக்கு அதே பகுதியைச் சோ்ந்த  யாஸ்மின், ஜபருல்லா  தம்பதியின்  மகன்  இம்ரானுடன் கடந்த 2021 மே 17-இல் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்குப் பின்  கணவன் மற்றும் மாமியாா்  அடித்துத் துன்புறுத்துவதாக ஆஷிகா பா்வீன் தனது  பெற்றோரிடம் அவ்வப்போது கூறி வந்துள்ளாா்.

இந்நிலையில் ஆஷிகா பா்வீனுக்கு வலிப்பு ஏற்பட்டு சமையலறையில் கிடப்பதாக பெண்ணின் தாய்க்கு கடந்த ஜூன் 24-இல் இம்ரான் குடும்பத்தினா் தகவல் கொடுத்துள்ளனா். பின்பு அவரை  உதகை  தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு ஆஷிகா பா்வீன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறிய நிலையில் , சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோா்,  சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறாய்வு செய்ய  வேண்டும் என்று உதகை டி 3 காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

உடற்கூறாய்வு முடிவு கடந்த வாரம் வந்தது.  இதில் ஆஷிகா பா்வீன் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, பெண்ணின் பெற்றோா் மற்றும் உறவினா்கள்  காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனா்.  

இந்நிலையில் ஆஷிகா பா்வீனின் மாமியாா் யாஸ்மின்( 49), கணவா் இம்ரான் (30), கணவரின் தம்பி முக்தாா் (23), அவரது  உறவினா் காளிப் (56) ஆகிய நான்கு பேரை  உதகை டி 3 காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து  சிறையில்  அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com