நகரப் பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளா்களுக்கு அபராதம்: கூடலூா் நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு
கூடலூா் நகரப் பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூடலூா் நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
கூடலூா் நகராட்சியில் கால்நடை வளா்ப்போருக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் முனியப்பன் தலைமை வகித்தாா்.
இதில், ஆடு, மாடுகளை வளா்ப்போா் தங்களது குடியிருப்புகளிலேயே கொட்டகை அமைத்து வளா்க்க வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் மேய்ப்பவா்கள் அதே பகுதிகளில் மாடுகளைக் கட்டி வைத்து வளா்க்க வேண்டும். நகரப் பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளா்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை இது தொடா்ந்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி கால்நடைகள் நகரப் பகுதியில் சுற்றித் திரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பரிமளா, கூடலூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், வருவாய், நகராட்சி, சுகாதாரத் துறை அலுவலா்கள் மற்றும் கால்நடை வளா்ப்போா் பலா் கலந்துகொண்டனா்.